வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! கிறுக்கல்கள்: 2010

Monday, July 5, 2010

என் 'மனசு'க்கு வாங்க..!

நண்பர்களே...

இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம் மனசு வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன். தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் என் மனசுக்குள் வந்து (சு)வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை பின் தொடரும் நண்பர்கள் அனைவரும் தயைகூர்ந்து சிரமம் பாராது என் மனசை பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மனசு எனக்கு மிகவும் பிடித்த பெயர். இதற்கான காரணம் எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கின்றது. இருந்தாலும் சொல்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர் இது. எனக்கும் எழுதும் ஆவலையும் பத்திரிக்கை மீதான காதலையும் கொடுத்தது இந்தப் பெயர். எனவே கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எல்லாம் இனி என் மனதில் மட்டுமே.

இன்று எனது பந்தயம் என்ற சிறுகதையை பகிர்ந்துள்ளேன். படித்து ஓட்டும், பின்னூட்டமும் மறவாமல் பின் தொடரவும் உங்களை என் மனசுக்கு அழைக்கிறேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில்......

என்றும் நேசங்களுடன்,

சே.குமார்.




Tuesday, June 29, 2010

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா...? பார்த்து பல நாளாச்சு..? எப்படியிருக்கீங்க..? ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...

பிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்லை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.

மன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...

அவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.

ஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.

எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.

நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...

நட்புடன்
சே.குமார்.





Wednesday, May 19, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

நாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.



அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.



என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.



பாசங்களுடன்,

சே.குமார்.




Friday, May 14, 2010

சனி

உயிரற்ற உடலோடு
உயிரோடு கோழி...
சனிக்கிழமை சாவு..!



Wednesday, May 12, 2010

மழை..!

கஷ்டப்பட்டு
வருணபகவானை
ரோட்டில் வரைந்து
நிமிர்ந்த போது
அழித்துச் சென்றது
மழை..!



Saturday, May 1, 2010

இல்லாமை..!

கிழிந்த சேலையை
மறைக்க முயன்ற கையில்
முதலாளியம்மாவின்
பட்டுச்சேலை..!

-'பரிவை' சே.குமார்.




Saturday, April 24, 2010

வேதனை

வற்றிய மடியில்
பால் குடிக்க காத்திருக்கும்
கன்றுக்கு இல்லாமல்
பீச்சப்பட்டது பால்...
வேதனையோடு கத்தியது பசு..!

-'பரிவை' சே.குமார்.




Saturday, April 17, 2010

மயிலிறகு

புத்தகத்துக்குள் பொத்தி வைத்த
மயிலிறகு குட்டிபோட்டதோ
இல்லையோ - உன்
கைபட்டு வந்ததால்
என்னை கட்டிப்போட்டது.!

-'பரிவை' சே.குமார்.




Wednesday, April 14, 2010

ராசி

பன்றி மீது மோதிய வண்டி
ராசியில்லை என்று
விற்று விட்டாய்...
ஓட்டிய உன்னை...?


-'பரிவை' சே.குமார்.




Sunday, April 11, 2010

நாணம்

திடீர் மழை..!
நனைந்த குமரியோ
நாணத்தோடு..!
பார்க்கும் விழிகளோ
நாணமின்றி..!

-'பரியன் வயல்' சே.குமார்



Wednesday, April 7, 2010

பறிக்காதீர்கள்

இது கிறுக்கல்களில் 100வது கவிதை...
ஆறு மாத காலத்தில் நான் கு வலைப்பூவில் 200க்கு மேல் எழுதியிருந்தாலும் ஒரே வலையில் 100 ஹைக்கூ என்பது எனக்கு நிச்சயமாக சாதாரண விசயமல்ல... இதற்கு நான் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டும் வாக்களித்தும் உற்சாகம் அளித்துவரும் நட்புக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

பூக்களைப் பறிக்காதீர்கள்
உடைந்த போர்டுக்கு கீழே
உயிருள்ள ரோஜா
பறிக்கப்பட்ட் போது
கண்ணீர் விட்டது காம்பு..!


-'பரியன் வயல்' சே.குமார்.




Monday, April 5, 2010

மறக்குமா..?

கண் எதிரே
கணவனுடன் நீ..!
ரணப்பட்ட இடத்தில்
ரகசிய மாநாடு...
மறக்குமா இதயம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 31, 2010

வன்முறை..!

புற்களின் மீது வன்முறை
சமாதானமாய்
கலைந்தபோது
மரணித்திருந்தது புல்..!

-'பரியன் வயல்' சே.குமார்


(தோழி பத்மா சன்ஷைன் அவார்டை தூக்கி நமக்கு கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு நன்றி. அப்புறம் நம்ம பிறந்து இன்னும் ஆறு மாதம்தான் ஆகுது. அதனால நாம மத்தவங்களுக்கு கொடுக்கிறது நல்லாயில்லை. அதனால நா யாருக்கும் கொடுக்க நினைக்கலை. சின்னப்புள்ள பெரியவங்களுக்கு கொடுத்தா நல்லா இருக்காததுல்லங்க... ---- நட்புடன் கிறுக்கல்கள்.)




Friday, March 26, 2010

மரண உறவு

மரணத்தின் பாதையை
அறியாமல் காற்றோடு
உறவாடியது இலை..!
வெட்டுப்பட்டது மரம்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Tuesday, March 23, 2010

இதயத் திருடி

காந்தக் கண்ணாம்..!
வசீகரிக்கும் உதடாம்..!
உடுக்கு இடையாம்..!
தந்தக் கால்களாம்..!
ஆளாளுக்கு உளறல்..!
நீ இதயத் திருடி என்பது
அவர்களுக்குத் தெரியுமா..?

-'பரியன் வயல்' சே.குமார்




Sunday, March 21, 2010

அடிமை

உன் கொலுசிற்குள்
என்ன வைத்துள்ளாய்...!
அதன் சிணுங்கலில்
அடிமையாய் மனசு...!

-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 17, 2010

வெளுத்ததால்...

வெளுத்து வாங்கியது
அடை மழை..!
வெளுக்கப் போகாததால்
பட்டினியாய் சலவைக்காரர்..!

'பரியன் வயல்' சே.குமார்




Thursday, March 11, 2010

சொல்லாத காதல்

குடைக்குள் நாம்
 உரசும் உடம்பும்...
மருகும் கண்களுமாய்...
மனசுக்குள் இதுவரை
சொல்லாத காதல்
மழைக்கால காளானாய்...!

--'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, March 9, 2010

தவம்

நீ பூக்கும்
சிறு புன்னகைக்காக
நீண்ட நேரமாய்
வெயிலில் நீறு பூக்க..!

-'பரியன்வயல்' சே.குமார்




Sunday, February 28, 2010

தடுமாற்றம்

ரகசியமாய் ஒருமுறை...
நீயும் திரும்ப...
நானும் திரும்ப...
தடுமாறியது இதயம்..!
 
-சே.குமார்




Saturday, February 27, 2010

பூத்துளி

மண் மீது மழைத்துளி...
சிதறிய மணல்
உன் காலில் பூக்களாய்..!

-சே.குமார்




Tuesday, February 23, 2010

மனசு..!

வயலில் தாய்...
வரப்பில் குழந்தை...
இருவருக்கும் இடையில்
அல்லாடும் மனசு..!

-சே.குமார்



Friday, February 19, 2010

ஆற்றாமை

பார்த்துப் பார்த்து
கட்டிய வீட்டில்
பதுங்கியது பாம்பு...
ஆற்றாமையால்
கதறியது குருவி..!

-சே.குமார்




Tuesday, February 16, 2010

ஒற்றை ரோஜா

ஆயிரம் ரோஜா பூத்திருந்தாலும்
அழகு என்னவோ
உன் தலையில் இருக்கும்
ஒற்றை ரோஜாவுக்குத்தான்..!

-சே.குமார்




Saturday, February 13, 2010

ஏக்கம்

கருகமணி ஆடும்
கழுத்தில் மஞ்சள் கயிறு
ஆடுவது எப்போது..?
ஏக்கமாய் முதிர்கன்னி..!

-சே.குமார்




Wednesday, February 10, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...

நெற்றி நிறைய பொட்டு...
தலை நிறைய மல்லிகை...
வீடெங்கும் தலைகள்...
கூடத்தில் தாலி அறுக்கும்
வைபோக ஏற்பாடுகள்..!

-சே.குமார்




Tuesday, February 9, 2010

வறண்ட பூமி..!

கூட்டமாய் குருவிகள்...
பசியாற வழியில்லாமல்
வறண்ட பூமி..!

-சே.குமார்




Monday, February 8, 2010

உறவுகளைத் தேடி...

தொலைந்த உறவுகளைத் தேடி
கடலோரத்தில் காவலாய்...
சுனாமி அலையால்
பைத்தியமான பாலகன்..!

-சே.குமார்




Sunday, February 7, 2010

ஆடை

குளிர்-
ஆடையின்றி அலையும்
குட்டிக்கு ஆடையானது
தாய்..!

-சே.குமார்




Saturday, February 6, 2010

இருட்டு

இருட்டுக்குள் அய்யனார்
வெளிச்சத்தை தேடி...
வெளிச்ச வீதியில்
இருட்டு மனங்கள்..!

-சே.குமார்




Thursday, February 4, 2010

ஏளனம்...

எதிர் காற்றில் தள்ளாடியபடி
சைக்கிளை மிதிக்கும் முதுமை...
தள்ளிப்பார்த்தது காற்று..!

-சே.குமார்




Wednesday, February 3, 2010

செடி

மாலைக்குள் மலருமா..?
நட்ட செடிக்குப்
பக்கத்தில் நடாத
செடியாய் குழந்தை..!



Tuesday, February 2, 2010

குரல்

ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!



Thursday, January 28, 2010

காய்ந்த கல்

தண்ணீர் வேண்டி
பாட்டிலுக்குள்
கல் எடுத்துப்
போட்டது காகம்...
தண்ணீரைக் குடித்தது
காய்ந்த கல்..!

-சே.குமார்




Wednesday, January 27, 2010

மனிதாபிமானம்..!

கிளறிய குப்பைக்குள்
துடித்த பூச்சியை
விட்டுச் சென்றது கோழி...
மனிதாபிமானம்..!

-சே.குமார்




Monday, January 25, 2010

விதவை

கோபுர வாசலில்
கோலமிடும் பெண்...
கோலம் இழந்து...
இளம் விதவை..!

-சே.குமார்




Saturday, January 23, 2010

ஆக்ரோஷம்

வீழ்ந்து எழுந்தாலும்
வீறாப்பு குறையாமல்
ஆக்ரோஷமாய்...
சண்டை சேவல்..!



Thursday, January 21, 2010

ஏங்கும் மனசு..!

எப்போது வருவாய்?
தொலைந்த உன்
நினைவுகளைத்
தொலைக்காமல்
ஏங்கிக் கிடக்கிறது மனசு..!



பயண நட்பு

நீண்ட பெருமூச்சுடன்
நின்றது புகைவண்டி..!
சிநேகமாய் சிரித்து
இறங்கியபோது
தண்டவாளமானது
பயண நட்பு..!


(வலையுலக நட்புக்கு எனது 'தொடரும்பொழுதுகள்'  (http://skvishal09.blogspot.com/2009/12/blog-post_18.html) என்ற கவிதை சங்கமம் உரையாடல் கவிதைப் போட்டிலும்

எனது சிறுகதையான "பார்வைகள்" அன்புடன் ராட் மாதவ்  (http://simpleblabla.blogspot.com/2009/12/blog-post.html ) வலைப்பூ நடத்தும் சிறுகதை போட்டியிலும் களத்தில் இருக்கின்றன. தாங்கள் படித்துப் பிடித்தால் ஓட்டும் பின்னூட்டமும் மறக்காமல் இடுங்கள் - நட்புடன் சே.குமார்)




Tuesday, January 19, 2010

இருட்டு

அமாவாசை இருட்டு...
பாண்டி கோவில் வாசல்
பல்லாங்குழி ஆடும் மனசு..!



Friday, January 15, 2010

காதல் பரிசு

காதல் பரிசாய் நீ
கொடுத்த தாஜ்மகாலைப்
பார்த்து சிரிக்கிறது
இடுப்பில் இருக்கும்
என் குழந்தை..!

-சே.குமார்.




Tuesday, January 12, 2010

அனாதை

அம்மாவின் மடியில்
சுகமான உறக்கம்...
பக்கத்துப் பையனின்
அழுகையால்
கலைந்தது கனவு..!
அனாதை இல்லம்..!

-சே.குமார்.




Friday, January 8, 2010

குடைக்குள்...

மழையில் நனைந்தால்
உனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்பதால்
குடைக்குள் நான்..!

-சே.குமார்




Monday, January 4, 2010

சிலை

சிலை முன்னே
நீயும்... நானும்...
காதலை சொல்ல
முடியாமல் சிலைகளாய்..!

-சே.குமார்




Friday, January 1, 2010

கவலை

கற்பு பற்றிய
கவலையோடு பூக்கள்..!
ஊர்வலமாய் வண்டுகள்..!



காதலிக்காக...

புற்களே...
பூக்களைத் தூவுங்கள்
செருப்பில்லாமல்
என் காதலி..!